

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எண்ணற்ற ஆசிரமங் களும், அதற்கென அறக்கட்டளை களும் உள்ளன. மகான்கள் மீது உள்ள நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடையை வாரி வழங்குகின்றனர். அவ்வாறு குவியும் நன்கொடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறா? என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. அந்த சந்தேகத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில், தி.மலையில் நடந்த அருணகிரிநாதர் விழா அமைந்துள்ளது.
அந்த விழாவில் பேசிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் தரன், “சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரம சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும், சமூக விரோத கும்பல் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது” என்று கூறினார். அவரது இந்த கருத்து, பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சேஷாத் திரி ஆசிரமத்துக்கு ரூ.100 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. அறக்கட்டளை மூலமாக, அந்த சொத்துகளை அபகரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்த சொத்தை பாதுகாக்க, சேஷாத் திரி ஆசிரமம் மற்றும் அதன்மூல மாக உருவாக்கப்பட்ட அறக்கட்ட ளையை இந்து சமய அறநிலையத் துறை ஏற்க வேண்டும். இல்லை யெனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர் கள், ஆன்மிக அன்பர்களைக் கொண்ட புதிய கமிட்டி அமைத்து, அரசாங்கமே பராமரித்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பவன்குமார் கூறும்போது, “சேஷாத்திரி ஆசிரமத்துக்கு வேடியப்பனூரில் 42 ஏக்கர் நிலம் உள்ளது. பணமாகவும் இருப்பு உள்ளது. சுமார் ரூ.100 கோடி வரை சொத்து இருக்கும். அந்த சொத்துகளை பராமரிக்கும் அறக்கட்டளையை கைப்பற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அறக்கட்டளையில் உள்ள பழைய குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவை அரசு அமைக்க வேண்டும் அல்லது இந்து சமய அறநிலையத்துறையே ஆசிரமத்தை ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.
நல்லவர்களிடம் ஒப்படைக்க தயார்
இதுகுறித்து சேஷாத்திரி ஆசிரம அறக்கட்டளைத் தலைவர் மற்றும் செயலாளர் முத்துகுமாரசாமி கூறும்போது, ‘‘ஆசிரமத்தில் முறைகேடு என்று காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பேசுகின்றனர். இந்த சொத்து என்னுடையது இல்லை. நிர்வாகக் குழுவில் குறைபாடு இருந்தால், கேள்வி கேட்க அரசுக்கு உரிமை உள்ளது. எனக்குப் பிறகு, என் குடும்பத்தினர் யாரும் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று கூறிவிட்டேன். இறைவனிடத்தில் பற்று உள்ளவர்கள், நன்றாக வழிநடத்தக்கூடிய நல்லவர்கள் முன்வந்தால், அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன். இந்து சமய அறநிலையத் துறை ஏற்க அனுமதிக்க மாட்டேன். தனி நபர்கள் கேட்பதற்காக அறக்கட்டளை பொறுப்பில் உள்ளவர்கள் விவரங்களை தெரிவிக்க முடியாது. இந்த சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது” என்றார்.