Published : 29 May 2018 12:34 PM
Last Updated : 29 May 2018 12:34 PM

ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி ஆலையை திறப்பதற்காகத்தான் தமிழக அரசு வலிமையற்ற அரசாணையைப் பிறப்பித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு

வலிமையற்ற, அபத்தமானக் காரணங்களைக் கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருப்பதாகவும், அவ்வாணை சட்டத்தின் முன் வலிமையாக நிற்காது எனவும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு திங்கள்கிழமை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி பொதுமக்கள் 13 பேரை காவல்துறையை ஏவி கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடும்படி கடந்த மே 23 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை சட்டத்தின் முன் நிற்காது என்பது தான் உண்மையாகும். ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட காரணம் வலுவற்றதாகும். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருந்தாகவும், இதை கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் ஆலையை ஆய்வு செய்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அதனடிப்படையில் ஆலையை மூட ஆணையிட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நடவடிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே அமையும்.

ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது ஸ்பீக்கிங் ஆர்டருக்கு இணையாக விரிவான காரணங்களைப் பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக ஸ்பீக்கிங் ஆர்டர் பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களையும், அரசையும், அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006 ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை ஏமாற்றியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை.

1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் மாசுக்களால் மக்களின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஸ்டெர்லைட் இன்று வரை மதிக்கவில்லை. இவ்வாறு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல அம்சங்கள் உள்ளன.

ஆனால், இப்போது அபத்தமான காரணத்தைக் கூறி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் வலிமையற்ற, அபத்தமானக் காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. “நான் அடிப்பது போல அடிக்கிறேன்... நீ அழுவதைப் போல அழு” என்று தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் சொல்லி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகவே தோன்றுகிறது.

இந்த நாடகத்தின் முடிவில் பாதிக்கப்படப் போவதும், துரோகத்திற்கு ஆளாகப் போவதும் தமிழக மக்கள்தான். அப்படி ஒரு துரோகம் அரங்கேற்றப்படக் கூடாது. அதை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள், உயிரிழப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி அவற்றில் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகக் கொள்கை முடிவு எடுத்து, அம்முடிவுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நிரந்தரமாக மூடும் முடிவுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கும். எனவே, மேற்கண்ட வழிமுறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு என்பது ஸ்டெர்லைட் ஆலையுடன் முடிவடைந்து விடுவதல்ல. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சிப்காட் வளாகங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்களின் உயிரைப் பறிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) ஆகிய நிறுவனங்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்”என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x