தங்கள் தெரு வழியாக சாமி வீதி உலா செல்ல வேண்டும்: கிராமப் பெண்கள் மறியல்
கடலூர்: தங்களிடம் வரி வசூலிக்கும் கோயில் நிர்வாகிகள், சாமி ஊர்வலத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு செல்லாததைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி வீதி உலா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் வீதிக்கு சாமி ஊர்வலத்தை நடத்தாமல், வேறு வீதி வழியாக சாமி ஊர்வலம் செல்வதை அறிந்து குறிப்பிட்ட சமுதாயத்தினர், ஆத்திரமடைந்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சுவாமி வீதி உலாவை செல்லும் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சாமி ஊர்வலம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருவிழாவிற்கு வரியை மட்டும் வசூலிப்பவர்கள், எங்கள் வீதி வழியாக சாமி ஊர்வலம் நடத்த முன்வருவதில்லை எ ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.
பின்னர் ராமநத்தம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் வீதி உலா நடைபெற்றது.
