Published : 21 Jul 2024 05:26 PM
Last Updated : 21 Jul 2024 05:26 PM
சென்னை: மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை, நிதி தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் தமிழக ஊரகவளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மாநிலங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் சார்பில் 10 முக்கியமான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல்ஜீவன் மிஷன்,பிரதமரின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), பாரத தூய்மை இயக்கம் (ஊரகம) ,பண்டைய பழங்குடியினருக்கான பிரதமரின் பெருந்திட்டம், எம்பிக்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத்திட்டம், எம்பிக்கள் மாதிரி கிராமத்திட்டம், பிரதமரின் முன்னோடி கிராமங்கள் திட்டம், பிரதமரின் கிராமசாலைகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
இவ்வாறான திட்டங்களுக்கு தன் பங்காக பலஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், இத்திட்டங்கள் தொடர்பாக அவ்வபோது மாநில அரசுகளின் அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய அரசு உதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழக அரசி்ன் ஊரகவளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று திட்டங்களின் செயல்பாடு, நிதித் தேவை குறித்து விளக்கினார். இந்நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT