

சென்னை: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசே காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கேக் வெட்டினார். அப்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், கட்சியினர் உடனிருந்தனர். பின்னர், தமிழக காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி காங்கிரஸ் அலுவகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை கூறியதாவது, “தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம். மக்கள் மீது சுமையை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அவர் கையெழுத்திடவில்லை.
மின்சாரம் தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல் போய்விடும் என்பதால் அவர் கையெழுத்திடவில்லை. அதன் பின்னர் முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டத்தில் கையெழுத்திடப்பட்டதால் மின்சாரம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கைக்குப் போய்விட்டது. அதனால் தான் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என செல்வப்பெருந்தகை கூறினார்.