Published : 09 May 2018 03:22 PM
Last Updated : 09 May 2018 03:22 PM

மூன்றாம் பாலினத்தவரை கொச்சைப்படுத்தும் காட்சிகள்: ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு எதிராக திருநங்கைகள் புகார்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் அப்சரா தலைமையில் புகார் அளித்தனர்.

'ஹரஹர மஹா தேவகி' படத்தை இயக்கிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் படத்தை தயாரித்த, இயக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு புகார் அளித்தது.

இந்த திரைப்படத்திற்கு திரைத்துறையினரே எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் ராமதாஸும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. திருநங்கைகளை வெறும் பாலியல் தொழில் செய்பவர்களாக கேவலமாக கொச்சைப்படுத்தி காட்சியை வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இயற்கையின் இரக்கமற்ற மாற்றத்தால் திருநங்கைகளாக மாறியவர்கள் தங்களை சமூகம் ஒதுக்கி வைத்துள்ள நிலையில் போராடி வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை நிரூபித்து அரசுத்துறை, ஊடகம் என பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். படித்த பட்டதாரிகளும் உள்ளனர். இந்நிலையில் இவ்வாறு தவறாக சித்தரித்து படத்தை எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘இருட்டறையில் முரட்டு குத்து’. படத்தில் மிகவும் ஆபாசமான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும், இயக்குனர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் அப்சரா மற்றும் சாஷா ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

மேலும் இயக்குனர் பொது மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த படத்தில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் உள்ள காட்சிகளை அகற்றக்கோரி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் அப்சரா மற்றும் தோஸ்த் அமைப்பினர் சார்பில் சாஷாவும் கோரிக்கை மனு அளித்தனர்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையிலும் அவர்கள் பாலியல் தொழிலுக்கு உட்பட்டவர்கள் போல் பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். இது சுயகவுரவத்துடன் இந்த சமூகத்தில் வாழநினைக்கும் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் திருநங்கைகளை தவறான எண்ணத்திலேயே பார்க்கதோன்றும்.

இந்த திரைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த தோஸ்த் அமைப்பின் சாஷா மற்றும் அப்சரா ஆகியோர் இணைந்து அத் திரைப்பட குழுவினரை சந்தித்து முறையிட்டனர். ஏற்கெனவே இந்த சமூகத்தில் திருநங்கைகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் இந்த திரைப்படம் எங்களை போன்றோர்களை மேலும் மனவேதனைக்குள்ளாகியுள்ளது என விஷாலிடம் முறையிட்டனர்.

மாவட்ட சட்ட ஆணையத்தின் நீதிபதி நீதிபதி ஐசக் ஜெயந்தியிடமும் படம் பற்றி புகார் அளித்தனர். பெண்கள் குறித்த அவதூறை அடுத்து திருநங்கைகள் குறித்தும் அவதூறாக காட்சிப்படுத்தியதன் மூலம் மீண்டும் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x