

சட்டமன்ற ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என அமைச்சர்கள் கூறினர்.
‘ஜனநாயகம் தழைத்தோங்கும் தமிழக சட்டமன்றம் மற்றும் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கம்’ என்ற தலைப்பில் சென்னை தி.நகரில் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடந்தது. தி.நகர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கலைராஜன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பேசியதாவது:
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்து, மரபுகளை காப்பாற்றி, அவை நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிக்கும் வகையில், திமுகவினர் ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் ஊர் ஊராக பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர்கள்தான் திமுகவினர்.
சட்டமன்ற ஜனநாயகம் பற்றி பேச, திமுக தலைவர் கருணாநிதிக்கோ, ஸ்டாலினுக்கோ, துரைமுருகனுக்கோ எந்தத் தகுதியும் இல்லை. திமுகவில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதை திசை திருப்பும் வகையில், திமுகவினர் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 2016 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினைத்தான் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஆனால், ஜெயலலிதாதான் நிரந்தர முதல்வர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.