எஸ்சி, எஸ்டி நலப்பள்ளிகளில் படித்து ஐஐடி, என்ஐடி-க்கு 8 மாணவர்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

எஸ்சி, எஸ்டி நலப்பள்ளிகளில் படித்து ஐஐடி, என்ஐடி-க்கு 8 மாணவர்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் பயின்று முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உயர்கல்வி பயிலும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஜெஇஇ, சிஎல்ஏடி போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐஐடி யில் பயில விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.பார்த்தசாரதி, திருச்சி என்ஐடி யில் பயில சேலம் மாவட்டம், கரியகோவில்வலவு, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.சுகன்யா, திருச்சி மாவட்டம், சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ரோகிணி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயில நீலகிரி மாவட்டம், மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் ஏ.அஜய், தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் (என்ஐஎஃப்டி) பயில திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவியர் கே.மீனா, எஸ்.துர்கா,கள்ளக்குறிச்சி மாவட்டம், மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி இ.பழனியம்மாள் மற்றும் மாணவர் கே.தவமணி, ஆகிய 8 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, அவர்களை வரவழைத்துப் பாராட்டி வாழ்த்துதெரிவித்ததுடன், மடிக்கணினிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா,துறையின் செயலர் க.லட்சுமி பிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in