“உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலருக்கும் சந்தேகம்” - கார்த்தி சிதம்பரம் கருத்து

“உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலருக்கும் சந்தேகம்” - கார்த்தி சிதம்பரம் கருத்து
Updated on
1 min read

சிவகங்கை: உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுவதாக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில் வலம்புரி செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடையை கார்த்தி சிதம்பரம் எம்.பி. இன்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முறைகேடு நடந்துள்ளதால் இந்த நீட் தேர்வு முடிவுகள் படி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது. மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் அல்லது பிளஸ் 2 மதிப்பெண்கள் படி மாணவர்களை சேர்க்க வேண்டும்.

ரவுடிகள் அதிகளவில் அரசியலுக்குள் வந்துவிட்டனர். இதனால் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளுக்கு அரசியல் பின்னணி கிடையாது. அனைத்துக் கட்சிகளிலும் ரவுடிகள் சேர்ந்துவிட்டனர். அவர்கள் முன்பகையால் கொல்லப்படும்போது அரசியல் கொலையாக பார்க்கப்படுகிறது. ரவுகள் மீது ஏன் போலீஸார் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும், கூலிப்படையை போலீஸார் தடுக்க வேண்டும். என்கவுன்ட்டர் என்பது ஏற்கமுடியாத ஒன்று. நீதிமன்றம்தான் தண்டனை வழங்க வேண்டும். உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுகின்றனர்.

கூலிப்படைகளை தடுக்க வேண்டியது போலீஸாரின் கடமை. அதிகாரிகளை மாற்றுவது அரசின் விருப்பம். ஆக்கபூர்வமாக செயல்படும் அதிகாரிகள் வரவேண்டும். ஒருவரது பின்னணியை அறிந்தே அவர்களை அரசியல் கட்சிகளில் சேர்க்க வேண்டும். கட்சிகள் பதவி கொடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆளுநர் ஒரு குழப்பவாதி. அவரை அப்பகுதியில் இருந்து நீக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் கவலை தேவையில்லை. அதனைப் பெற சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த ஆண்டு கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருவதால் அவர்களே காவிரியில் தண்ணீரை திறந்து விடுவர். மோடியின் புதிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லாததால், பட்ஜெட்டிலும் மாற்றம் இருக்காது.

மின் கட்டன உயர்வு தேவையற்றது. மக்கள் மீது பாரத்தை சுமத்தியிருக்க கூடாது. மின்சார வாரியத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மின் கட்டணம் உயராது. இதுகுறித்து பேச அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், நகரத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in