பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகளுடன் புதிதாக 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல்: மேலாண்மை இயக்குநர் தகவல்

பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகளுடன் புதிதாக 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல்: மேலாண்மை இயக்குநர் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை புதிதாக கொள்முதல் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் - சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்துக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் தினமும் சராசரியாக 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.காலை, மாலை நேரங்கள், விடுமுறை, பண்டிகை நாட்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய மெட்ரோ ரயில்களை வாங்க, நிதி ஆயோக் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகு, ரயில்கள் கொள்முதல் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது: தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மூலம் ஒன்றரை ஆண்டுகள் வரை பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய முடியும். அதன்பிறகு, புதிய ரயில்களை கொள்முதல் செய்து, இயக்குவது அவசியமாகிறது.

எனவே, 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய ரயில்கள் வாங்க முயற்சி எடுத்துள்ளோம். இப்போது, நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தலா 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை மொத்தம் ரூ.2,820.90 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெறப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in