Published : 19 Jul 2024 05:12 AM
Last Updated : 19 Jul 2024 05:12 AM
சென்னை: சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழக நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. சுமார் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். கல்வி, பணி நிமித்தமாக தினமும் 20 லட்சம் பேர் மாநகருக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1096 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் ஜூலை 18-ம் தேதி நிலவரப்படி, 4 ஆயிரத்து 736 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 40.28 சதவீதமாகும்.
இந்த இருப்பை வைத்துக்கொண்டு, நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி நீர் ஆகியவற்றின் உதவியுடன் வரும் அக்டோபர் வரை மாநகரின் குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டியுள்ளது.
அதனால் கிருஷ்ணா நதி நீர் கிடைத்தால், மாநகர குடிநீர் தேவையை சமாளிக்க மேலும் உதவியாக இருக்கும் என்று தமிழக நீர்வளத்துறை கருதுகிறது. இந்நிலையில் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக்கோரி தமிழக நீர்வளத்துறை ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இரு மாநிலங்களுக்கு இடையே 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் அக். 6-ம் தேதி வரை 2 ஆயிரத்து 412 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே கிடைத்தது. ஆந்திர மாநில பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேரு அணையில் தற்போது 6 டிஎம்சி நீர்தான் உள்ளது.
தற்போது அண்டை மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தசூழலில் சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கக்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT