Last Updated : 18 Jul, 2024 12:39 PM

1  

Published : 18 Jul 2024 12:39 PM
Last Updated : 18 Jul 2024 12:39 PM

அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட வழக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | காவேரி அணை

விழுப்புரம்: அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது. தொடர் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலும் தமிழகத்துக்கான தண்ணீரை திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உபரி நீரை திறக்கும் வடிகாலாகவே கர்நாடகா தமிழகத்தை பார்க்கிறது.

காவிரியின் துணை ஆறுகளில் கட்டப்பட்ட அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கிடும்படி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக சார்பில் ஜி.கே.மணி பேசியுள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை ரோகிணி ஆணையம் வழங்கி ஓராண்டு கடந்தும் தமிழக அரசு முடிவெடுக்காதது வருத்தம் அளிக்கிறது. ஓபிசி வகுப்பில் 2,633 சாதிகள் உள்ளன. அவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 72.05 சதவீத இட ஒதுக்கீடை 150 சாதிகள் மட்டுமே அனுபவிக்கின்றன. எஞ்சிய 1,977 சாதிகளுக்கு 2.66 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது.

தமிழகத்தில் 4,829 மதுக்கடைகள் அதிகாரபூர்வமாக செயல்படுகின்றன. ஒவ்வொரு கடையின் கீழும் 4, 5 சந்துக்கடைகள் இயங்கிவருகின்றன. சந்துக்கடைகளை நடத்துபவர்களை கைது செய்து 3 ஆண்டுகள் சிறையிலடைக்க வேண்டும். அண்மையில் திருத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் இச்சட்டத்தை திருத்தியதற்கு பொருள் இல்லாமல் போய்விடும். 500 மதுக்கடைகள் மூடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அடுத்த 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும். புதிய மதுக்கடைகளை திறந்து இருந்தால் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும். தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசியல் படுகொலைகள் நடக்கின்றன. மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் முன்பே ஒரு கொலை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது. ஆளுநர், அரசு மோதலால் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர், கோவை பாரதியார், தமிழ்நாடு கல்வியல் பல்கலைக் கழகம் உள்ளிட்டவற்றில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளது.

இது உயர்கல்விக்கு நல்லதல்ல. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கவேண்டும். இப்போது தக்காளி கிலோ ரூ.100 என்ற வீதத்தில் விற்கப்படுகிறது. விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை. இதற்காகத்தான் அனைத்து வட்டங்களிலும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியிறுத்திவருகிறேன்.

முதல்வர் வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கவேண்டும். அப்படி நடந்தால் முதல்வரின் கவனத்திற்கு பத்திரிகையாளர்கள் இதையெல்லாம் கொண்டு செல்ல முடியும். உதயநிதியை துணை முதல்வராக்குவது அவர்கள் கட்சி சார்ந்த பிரச்சினை. அதில் கருத்துச் சொல்லமுடியாது. நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும்.” என்றார். பேட்டியின் போது பாமக மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x