Published : 18 Jul 2024 08:16 AM
Last Updated : 18 Jul 2024 08:16 AM
சென்னை: வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆங்கிலேயேரால் உருவாக்கப்பட்டு ஒரு காலத்தில் நிலவரி வசூலில் மட்டும் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை, பொது நிர்வாகம், மக்கள் நலன் காக்கும் துறையாக உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், 6,52,559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் மூலம், 2 ஆண்டுகளில் 41,81,723 பட்டா மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.
மாநிலத்தில் மொத்தம் உள்ள186 நகரங்களில் 179 நகரங்களுக்கான புலப்படங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 7 நகரத்துக்கான புலப்படங்கள் இணையத்தில் ஏற்றும் பணி நடைபெறுகிறது.2.75 கோடி சன்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித்தொகைரூ.1,200 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 34.05 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை தற்போது 34.90 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் 80 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5,337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா மட்டுமின்றி, 3 ஆண்டுகளில் புயல், வெள்ளம் தமிழகத்தைத் தாக்கின. கடந்தாண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் பாதிக்கப்பட்டன. இவற்றுக்கான நிவாரணம், சீரமைப்பு பணிகள் போர்க்காலஅடிப்படையில் நடந்தன.
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகன மழைப்பொழிவால் மனித உயிரிழப்புகள், கால்நடை இறப்பு, பொது உட்கட்டமைப்புகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. அப்போது, ரூ.2,476.89 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல்வர் வழங்கினார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 29,54,269 குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், நிவாரணம் கோரிய 2,68,869 குடும்பங்களுக்கு, தலா ரூ.6 ஆயிரம், எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.1.15 கோடி, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.48.18 கோடியும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
அதேபோல், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 6,63,760 குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், மிதமான பாதிப்புக்குள்ளான 14,31,164 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.541.37 கோடி வாழ்வாதார நிவாரணம், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம்வழங்கப்பட்டது. இரு நிகழ்வுகளாலும் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்பு சேதங்களைச் சீரமைக்க ரூ.130 கோடி, மீனவர்களுக்கு ரூ.28.10 கோடியை முதல்வர் வழங்கினார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி, மனைகளாகப் பிரித்திருந்தால் மனை விற்பனை பதிவின்போது பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. நில அளவை போன்ற அனைத்து பணிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படி, கடந்த 3 ஆண்டுகளில் வருவாய்த் துறை மூலம், முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘முதல்வரின் முகவரித் துறை’, ‘கள ஆய்வில் முதல்வர்’, ‘மக்களுடன்முதல்வர்’, ‘நீங்கள் நலமா’ உள்ளிட்ட பல புதிய திட்டங்களால் மக்கள் குறைகள் மனு வழங்கிய 15 நாள்களில் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கும் தமிழகம் சீரிய முறையில் வழிகாட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT