Last Updated : 18 Jul, 2024 09:36 AM

 

Published : 18 Jul 2024 09:36 AM
Last Updated : 18 Jul 2024 09:36 AM

போக்குவரத்து விதிமீறல்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: காப்பீடு செய்யாத வாகனங்களால் இழப்பீடு பெற முடியாத அவலம்

பிரதிநிதித்துவப் படம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற நீதிபதி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கு காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சின்னாம்பாளையம் ராம் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி (58). நீலகிரி மாவட்டமகளிர் நீதிமன்ற நீதிபதியான இவர் நேற்று முன்தினம் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி போலீஸார் விசாரித்து, கஞ்சம்பட்டி நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து (28) என்பவரைக் கைது செய்தனர்.

இதற்கிடையில், சின்னாம்பாளையத்தில் நீதிபதி கருணாநிதியின் உடலுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கூறும்போது, “நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனத்தை மோதியவர், மதுபோதையில் வாகனத்தை ஓட்டியுள்ளார். அவருக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது. வாகனத்துக்கு காப்பீடும் கிடையாது. எல்லாவிதமான போக்குவரத்து விதிமுறை மீறல்களும் நடந்துள்ளன. இதனால், விபத்தில் இறந்து போன நீதிபதியின் குடும்பத்துக்கு எந்த காப்பீட்டுத் தொகையும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது உடல் இயக்கம் முடக்கப்பட்டாலோ, அந்தக் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறது. ஆனால், விபத்தை ஏற்படுத்தியவர்கள் சிறிது காலம் சிறையில்இருந்துவிட்டு, வெளியே வந்து விடுகிறார்கள். கள்ளச் சாராயம் குடித்து இறப்பவர்கள் குடும்பத்துக்கு அரசுரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. ஆனால், காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் மோதி உயிரிழப்பவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை.

கிராம மக்கள் பெரும்பாலானோர் வாகனங்களுக்கு காப்பீடு செய்வதில்லை. இதனால், விபத்து நேரிடும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. போலீஸார் இதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு இல்லாத வாகன ஓட்டிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் சாலையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்றனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவது, 16 வயது நிரம்பாத சிறுவர்களை இருசக்கர வாகனங்களை ஓட்ட பெற்றோர் அனுமதிப்பது, மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவையே விபத்துகள் அதிகரிக்க முக்கியக் காரணங்களாக உள்ளன. வாகனவிபத்துகளால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் இறந்தாலோ அல்லது பலத்த காயமடைந்தாலோ, அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து, கடனாளியாகி விடுகின்றனர்.

மருத்துவ செலவு, மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவை இருந்தாலும், அவை அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதில்லை. விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால்,காவல் துறையினர் சாலை விதிகளை மீறுவரைக் கண்காணித்து, தக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்பதால்தான் விபத்துகள் அதிகரிக்கின்றன” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x