Published : 18 Jul 2024 06:06 AM
Last Updated : 18 Jul 2024 06:06 AM
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் நேற்றுபொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை மாநகராட்சி 426சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களிடமிருந்து சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.1800கோடி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம்கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 5 ஆயிரத்து500 டன் குப்பை கையாளப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சி இதுவாகும்.
தமிழகம் முழுவதும் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிகள் அனைத்தும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் கீழ் வருகின்றன. ஆனால் சென்னை மாநகராட்சி மட்டும், நேரடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரின் கீழ் வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க, 366 ஆண்டு பழமையான சென்னை மாநகராட்சிஆணையராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரிப்பன்மாளிகையில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த குமரகுருபரனிடம், ஆணையர் ராதாகிருஷ்ணன் பொறுப்புகளை ஒப்படைக்க, மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 2004-ம் ஆண்டு ஐஏஎஸ்அதிகாரியான குமரகுருபரன், முதலில் திருநெல்வேலி சார் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து வணிகவரித் துறை இணை ஆணையர், நாமக்கல் ஆட்சியர், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், அரசு கேபிள்நிறுவன மேலாண் இயக்குநர், பத்திரப் பதிவுத் துறை தலைவர், சிப்காட் மேலாண் இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறைஆணையர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடைசியாக பள்ளிக்கல்வித் துறை செயலாக இருந்த இவர்,தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT