

சென்னை: கன்டெய்னர் லாரி விபத்துகளைத்தடுக்க, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சரக்குகளை ஏற்றதுறைமுக அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என டிரைலர் லாரிஉரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து துறைமுக டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுரேஷ் பாபு கூறியதாவது: சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களில் இருந்து தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானகன்டெய்னர் லாரிகள் மூலமாக,சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. துறைமுகங்களுக்கு வரும் கன்டெய்னர் லாரிகளில் நிர்ணயித்த எடையை விட 3 மடங்கு வரை கூடுதல் சரக்குகள் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
துறைமுக பொறுப்புக் கழகஅதிகாரிகள் வருமான லாபத்துக்காக இதுபோன்ற அதிக எடையுள்ள சரக்குகளை லாரியில் ஏற்றக்கூடாது. இதுகுறித்து பேசினால், கன்டெய்னர் லாரிகளின் ஒப்பந்ததை ரத்து செய்து விடுகின்றனர். இவ்வாறு 30-க்கும் மேற்பட்டகன்டெய்னர் லாரிகள் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை கிரேன் மூலம் கையாள புதிதாக சேர்க்கப்படும் ஆபரேட்டர்களுக்கு அனுபவம் இல்லாததால் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால், துறைமுகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இத்தகைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் துறைமுக நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.