

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமான பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்த்தப்பட உள்ளது. இப்பணி முடிவடைந்தால் ஏரியில் 3,971 மில்லியன் கன அடி நீரை சேமிக்க இயலும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது பூண்டி ஏரி (சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்). திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இந்த ஏரியை அமைக்க 1940-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
வெள்ள நீரைத் தேக்கி வைப்பதற்காக 1944-ல் ஏரி உருவாக்கப்பட்டது. இதன் நீர்பிடிப்புப் பகுதி 1,968 சதுர கி.மீட்டர். ஏரியின் அப்போதைய கொள்ளளவு 2,750 மில்லியன் கன அடி.
குடிநீர் தேவை அதிகரிப்பு: இந்த ஏரிக்கு கொசஸ்தலையாறு, நகரியாறு, கண்டலேறு - பூண்டி கால்வாய் (கிருஷ்ணா நீர் கால்வாய்) ஆகியவற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. கிருஷ்ணா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 1996-ம் ஆண்டு இந்த ஏரியின் நீர்மட்டம் 33 அடியிலிருந்து 35 அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், ஏரியின் கொள்ளளவு 2,750 மில்லியன் கன அடியிலிருந்து 3,231 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.
சென்னையின் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின்கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூண்டி ஏரியின் நீர்மட்டத்தை மேலும் 2 அடி அதிகரிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திட்ட அறிக்கை தயாரிக்க நிதி: பூண்டி ஏரியின் நீர் மட்டத்தை மேலும் 2 அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப் படவுள்ளன. இதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் தமிழக அரசு ரூ.48 லட்சம்ஒதுக்கியுள்ளது.
மட்ட அளவு எடுத்தல், விரிவானவடிவமைப்பு என ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி இந்த ஏரியின்முழுக் கொள்ளளவு அதிகரிக்கப் படும்போது ஏரியின் சேமிப்பு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியிலிருந்து 3,971 மில்லியன் கனஅடியாக (0.74 டிஎம்சி)அதிகரிக் கும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்தகொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி. இவற்றில் நேற்றைய நிலவரப்படி 5,785 மில்லியன் கன அடிதான் நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 7,820 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.