

சென்னை: வனத்துறைக்கு சொந்தமான நிலம் முன்னாள் எம்எல்ஏ பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில் வனத்துறைக்குச் சொந்தமான 40.95 ஏக்கர் நிலம் இம்பீரியல் கெமிக்கல் என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த 1942-ம் ஆண்டு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
பின்னர், அந்த நிறுவனத்தின் பெயர் கிரசன்ட் டைஸ் அண்டு கெமிக்கல் என கடந்த 1983-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதையடுத்து நிபந்தனையை மீறியதாக அந்த நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கடந்த 1984-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தார்.
அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிலத்தை இந்தியன்எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் என்றநிறுவனத்தின் பெயருக்கு மாற்றியுள்ளதால் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தின் குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன்படி அந்த நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்து நிலத்தைமீட்க வேண்டுமென நில அளவை ஆணையரும் கடந்த 1986-ம் ஆண்டுஜூன் 6-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து அந்நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே முன்னாள் எம்எல்ஏ-வான ஞானசேகரன், அந்த நிலத்தை வருவாய்த் துறை நிலம் என வகைமாற்றம் செய்து, அதில் ஒரு பகுதியை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இது சட்டவிரோதமானது என்பதால் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “1942-ம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அந்த நிலம் தொடர்பாக இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி வழக்குத் தொடர முடியும்?” என்றனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “அந்த நிலம் தொடர்பான தகவல்கள் தற்போதுதான் தெரியவந்துள்ளது. அதனால்தான் இந்த வழக்கைதொடர்ந்துள்ளோம்” என விளக்க மளிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், “பாதுகாக்கப்பட்ட (ரிசர்வ்) வனப்பகுதி எப்படி தனி நபரது பெயருக்கு மாற்றப்பட்டது?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், “இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் தேவை” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “இந்தநிலம் குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று இதுதொடர்பாக ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.