Published : 12 Apr 2014 11:07 AM
Last Updated : 12 Apr 2014 11:07 AM

காமராஜருக்கு ஏற்பட்ட கதிதான் திராவிடக் கட்சிகளுக்கும் வரும்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கணிப்பு

கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான ஆர். நல்லகண்ணு. திண்டுக்கல் பிரச்சாரத்தின் போது ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்லப்படுகிறதே?

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள மாயவலைதான் மோடி அலை. குஜராத் கிராமங்களில் சாலை வசதியில்லை. அங்கு கடந்த 10 ஆண்டு களில் 3,128 விவசாயிகள் இறந்துள்ளனர். ஏழைகள் அதிகம் வசிக்கும் மாநிலம் குஜராத். இதெல்லாம் வெளிச்சத்துக்கு வரவில்லை. முன்பு காங்கிரஸை தூக்கி வைத்துக் கொண்டாடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், இப்போது பாஜக-வை தூக்கிப் பிடித்துள்ளன.

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத அணிகள் வெற்றி பெற முடியுமா?

சுதந்திரத்துக்குப் பிறகு 1967 வரை தமிழகத்தில் 20 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மாற்றமே வராதா என நினைத்தபோது காமராஜரே தோல்வி கண்டார். அதற்கு பிறகு திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது தீராத குடிநீர் பிரச்சினை, அழிவுப்பாதையில் விவசாயம், கிரானைட், மணல், காடு உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்கள் தமிழகத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால், 1967-ல் காமராஜருக்கு ஏற்பட்ட நிலை திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் விரைவில் ஏற்படப்போகிறது.

தமிழகத்தில் இடதுசாரிகள் ஆழமாக வேரூன்ற முடியவில்லையே?

அப்படி கூறிவிடமுடியாது. நாங்களும் சாதி, மத பிரச்சினைகளுக்காகவும் மக்களுக்கான அடிப்படை பிரச்சினை களுக்காகவும் போராடித்தான் வரு கிறோம். கொள்கை அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளோம். விரைவில் இடதுசாரிகள் மூலம் சமூக மாற்றமும் அரசியல் மாற்றமும் வரும்.

தொடர்ந்து அதிமுக உதாசீனப்படுத்தியும் அவர்களுடன் இடதுசாரிகள் தன்மா னத்தை விட்டு அனுசரித்து போகக் காரணம் என்ன?

எங்கள் நலனுக்காக அனுசரித்து போகவில்லை. மக்கள் நலன், காங்கிரஸ், பாஜக- வுக்கு மாற்றாக கூட்டணி ஏற் படுத்தவே அதிமுக-வை அனுசரித்துச் சென்றோம். ஆனால், அவர்கள் திட்ட மிட்டு வெளியேற்றினர்.

அதிமுக இடதுசாரிகளை கடைசி நேரத்தில் கழற்றிவிட உண்மையான காரணம்தான் என்ன?

அதன் பின்னணியில் மர்மம் உள்ளது. அது தேர்தலுக்கு பின் தெரியும்.

தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தால் அவருக்கு ஆதரவு கொடுப்பீர்களா?

யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கான முயற்சிகளில் இடதுசாரிகள் ஈடுபடுவோம்.

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?

மோடி வெற்றி பெற்றால் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் என பாஜக கூட்டணி தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் ராமர் கோயில் கட்டுவோம், எனக் கூறியுள்ளனர். இதைப்பற்றி தமிழகத்தில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தலைவர்கள் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை? “இலங்கை தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தலையிடமுடியாது’ என்கிறார் வெங்கைய நாயுடு. இந்தக் கருத்தை பாஜக கூட்டணியில் உள்ள தமிழக தலைவர்கள் ஆதரிக்கிறார்களா? முரண்பாட்டின் மொத்த உருவமான பாஜக கூட்டணி தமிழகத்தில் கரைசேர முடியாது.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிக் கட்சி களை கடைசி நேரத்தில் கழற்றிவிடும் அதிமுக-வுக்கு எதிர்காலம் உண்டா?

நிச்சயமாக அதிமுக-வுக்கு எதிர் காலமே கிடையாது. மக்கள் நம்பிக் கையை இழந்துவிட்ட திமுக, அதிமுக கட்சிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x