

சென்னை: காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில், காவிரி நீரை தமிழகத்துக்கு தரமுடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துஉள்ளார்.
தற்போதைய தென்மேற்கு பருவமழை காலத்தில், தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. ஆனால், நீரை திறக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது. இதையடுத்து, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தின் அவசியம், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துரைமுருகன் விளக்கினார். தொடர்ந்து, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் தரப்பு கருத்துகளை வலியுறுத்தினர்.
கூட்டத்தின் நிறைவாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய நீரை கடந்த ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீரை பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் சூழ்நிலையிலும், கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மீறும் வகையிலும், காவிரி நீரை தமிழகத்துக்கு தரமுடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
அந்த வகையில், தமிழகம் பெறவேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வி.பி.நாகை மாலி, பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந் திரன், மு.வீரபாண்டியன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், பூமிநாதன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, மமக சார்பில் ஜவாஹிருல்லா, புதுமடம் அலீம், கொமதேக சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோ ரும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.