Published : 17 Jul 2024 08:44 AM
Last Updated : 17 Jul 2024 08:44 AM
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற துணை நிற்பதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப்பின் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ.எஸ்.மணியன், எஸ்.பி. வேலுமணி (அதிமுக): மத்திய அரசு இடுபொருள் மானியத்தை ரூ.17 ஆயிரமாக உயர்த்திய போதும், தமிழக அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சியில் குறுவைக்கு பயிர்காப்பீட்டை ரத்து செய்துவிட்டனர். கூட்டுறவு கடன் விவகாரத்தில், வறட்சி ஆண்டைாக இந்த ஆண்டை அறிவித்துஎப்போது வேண்டுமானாலும், அசல் மட்டும் கட்டினால் போதும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் வஞ்சிக்கின்றனர். திமுக போதிய நீரை பெற்றுத்தர அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியாகவும் அழுத்தம் தரவேண்டும். தமிழக முதல்வர் கொண்டுவந்த கண்டன தீர்மானத்தை மட்டும்அதிமுக ஆதரிக்கிறது.
கரு.நாகராஜன் (பாஜக): காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமையை பெற தமிழக அரசுடன் பாஜக ஒன்றுபட்டு நிற்கும். இதில் பிரதமர் தலையிட வாய்ப்பே இல்லை. மாநில உரிமையை பெற அரசியல் பேசக்கூடாது. மக்கள் உரிமையை பெற ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வரின் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் இதில் தலையிட்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத்தர வேணடும். இந்த விவகாரத்தில் அனைவரிடமும் ஒற்றுமை இருக்கிறது என்று நம்புகிறோம்.
மு.வீரபாண்டியன் (இ.கம்யூ): காவிரி விவகாரம் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு ஏற்படவில்லை. ஒரு நதி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் செல்லும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது அவசியம். நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): கர்நாடகாவின் பாசனப்பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிகரித்துள்ளது குறித்தும் தண்ணீர் பெறவும் உச்ச நீதிமனறத்தை நாட வேண்டும். தமிழக அரசு வலிமையான அதிகாரம் வாய்ந்த ஆணையத்தை உருவாக்கவும் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
திருமாவளவன் (விசிக): அனைத்து கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும், அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து கர்நாடக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்குமாறு அழுத்தத்தை கொடுக்கவேண்டும் போன்ற ஆலோசனைகளை முன்வைத்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
சதன் திருமலைக்குமார் (மதிமுக): உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக முதல்வரை கண்டிக்கிறோம். முதல்வரின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிப்போம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): தமிழக முதல்வர்நிறைவேற்றியுள்ள 3 தீர்மானங்களால் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும், காவிரி ஆணையத்தையும் மதிப்பதில்லை. கர்நாடகாவில் விவசாய பரப்பை அதிகரிக்கின்றனர். தமிழகத்திலும் நீரேற்று விவசாய பரப்பை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில், காவிரி நீரை தமிழகத்துக்கு தரமுடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT