Published : 17 Jul 2024 08:25 AM
Last Updated : 17 Jul 2024 08:25 AM
கோவை: கோவை அருகே ஒரு வீட்டில்,பெட்ரோலை கேனில் ஊற்றும்போது தீப்பிடித்ததில் 3 பேர் உயிர் இழந்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரில், திருமூர்த்தி என்பவருக்குச் சொந்தமாக வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த அழகர்ராஜா என்பவர் தங்கி, பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
அவருடன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னகருப்பு, முத்துகுமார், தினேஷ், மனோஜ், வீரமணி, பாண்டீஸ்வரன் ஆகியோரும் தங்கியிருந்தனர். இவர்களில் 3 பேர் ஓட்டுநர்களாகவும், மற்றவர்கள் தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அழகர்ராஜா உள்ளிட்ட 7 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, பாண்டீஸ்வரன் சமையலறையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த அழகர்ராஜா, அடுப்பு அருகே 10 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை, ஒரு லிட்டர் கேனில் ஊற்றிக் கொண்டிருந்தார். திடீரென பெட்ரோல் தீப்பிடித்து, அறை முழுவதும் பரவியது.
உடலில் தீப்பிடித்த பாண்டீஸ்வரன் அங்கிருந்து வெளியே ஓடினார். மற்ற 6 பேரால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் அழகர்ராஜா, சின்னகருப்பு, முத்துகுமார் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தினேஷ், மனோஜ், வீரமணி மற்றும் பாண்டீஸ்வரன் ஆகியோர்கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எஸ்.பி. பத்ரிநாராயணன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ஓட்டுநர் அழகர்ராஜா லாரியில் செல்லும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை புஷ்பலதா மீது மோதியதில், அவர் உயிரிழந்தார் இதனால் வருத்தத்தில் இருந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து அறையில் மது அருந்தி உள்ளார். டேங்கர் லாரி ஓட்டுவதால், அதிலிருந்து கசியும் பெட்ரோலை பிடித்துவைத்து, பயன்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்துக்குப் பயன்படுத்துவதற்காக பெரிய கேனில் இருந்த பெட்ரோலை, சிறிய கேனில் மாற்றும்போது விபத்து நேரிட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT