

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.,வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான டிடிவி தினகரன் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடவுள் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் இருப்பதற்கான அடையாளம்தான் அன்னையர் என்பர்.
பாசத்தையும், அரவணைப்பையும் அள்ளித்தரும் அன்பின் ஊற்று அன்னையர். தன் தேவைகளின் சிந்தனையைப் பின்னுக்கு தள்ளிவைத்து, தன்னுடைய அன்புச் செல்வங்கள் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் தேவையை தன் சிந்தையின் முன் வைத்து, ஓய்வின்றி உழைத்திடும் அன்னையர் ஒவ்வொருவரும் தியாகத்தின் பிறப்பிடமே.
தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை, என்ற மிக உயர்ந்த தத்துவத்தைக் கொண்ட தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்று முதன்மையாக்கிட உழைத்திட்ட நம் மாண்புமிகு அம்மா அவர்களை இத்தருணத்தில் நினைத்து வணங்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்த பாதையில் பயணிக்கும் நம் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் வீறுநடை போடும் நாம், நம் மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்ட இலட்சியங்களை முன்னெடுத்துச் சென்றிடுவோம், அதில் வென்றிடுவோம். தியாகத்தின் திருவுருவாய், இறைவனின் மறுவடிவாய் திகழும் அன்னையர் அனைவரையும் இந்நன்னாளில் வணங்கி, எனது அன்னையர்தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.