Published : 17 Jul 2024 06:25 AM
Last Updated : 17 Jul 2024 06:25 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மேலும் 10 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.
பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள்காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு, முதல் தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. மேலும், அவர் நாட்டு வெடிகுண்டுகள் உட்படமேலும் சில ஆயுதங்களையும் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி: இவற்றை எடுப்பதற்காக கடந்த 14-ம்தேதி அதிகாலை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் அருகே தப்பி, அங்குள்ள தகரக் கொட்டகையில் பதுங்கி, அங்கு ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட்டபோது எதிர் தாக்குதலில் திருவேங்கடம் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மீதம் உள்ள 10 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணை முடிவடைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேரையும் பூந்தமல்லி சிறையில் போலீஸார் அடைத்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடிப்படையாக வைத்து குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT