Last Updated : 16 Jul, 2024 07:01 PM

 

Published : 16 Jul 2024 07:01 PM
Last Updated : 16 Jul 2024 07:01 PM

மதுரை நாதக நிர்வாகி கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமா? - போலீஸ் விசாரணை 

மதுரையில் நடைபயிற்சி சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்

மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் இன்று காலை ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையம் அருகிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதி சாலையில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வர். இச் சாலையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன் (46) என்பவரும் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை அவர் நடந்து சென்றபோது, அவரை 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் அக்கும்பல் திடீரென அவரை வழிமறித்து தகராறு செய்து, பாலசுப்பிரமணியனை அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளது. அவர்களிடமிருந்து பாலசுப்பிரமணியன் தப்பித்து ஓடியுள்ளார். ஆனாலும், அந்தக் கும்பல் அவரை விடாமல் விரட்டி, விரட்டி வெட்டி சாய்த்துள்ளது

சினிமா பாணியில் நடந்த இந்தக் கொலையைப் பார்த்துவிட்டு, சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் தெறித்து ஓடினர். கொலைவெறிக் கும்பலிடம் வெட்டுப்பட்டு தெருவில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இக் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டார் தூரத்தில் தான் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் இல்லம் அமைந்துள்ளது. அங்கு போலீஸார் பணியில் இருந்த நிலையிலும் மர்மக் கும்பல் துளியும் அச்சமின்றி இந்தக் கொலையை அரங்கேற்றி இருக்கிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தல்லாகுளம் போலீஸார் சம்பவ இடத்தைச் சுற்றியும் இருந்த சிசிடிவி பதிவுகளை சேகரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். விசாரணையில், கொலையான பாலசுப்பிரமணியன் மீது கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அவரது தம்பி மகளை திருமணம் செய்துகொடுத்த இடத்திலும் அவருக்குப் பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர் பாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு செல்வி என்ற மனைவியும் 8 மற்றும் 10 வயதில் இருமகன்களும் உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய தல்லாகுளம் போலீஸார், “கொலையான பாலசுப்பிரமணியன் நாம் தமிழர் கட்சியில் செல்லூர் பகுதிச் செயலராக இருந்தார். தற்போது, வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருப்பதாக கூறுகின்றனர். இவர் மீது ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இவரது தம்பி பாண்டியனின் மகளை மகாலிங்கம் என்பவரது மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அந்த வகையில் சில பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக பால சுப்பிரமணியனுக்கும், மகாலிங்கத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், மகாலிங்கம் தான் தனக்கு விசுவாசமான நான்கு பேரை வைத்து பாலசுப்பிரமணியனை தீர்த்துக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அரசியல் உள்ளிட்ட வேறு காரணத்துக்காக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்” என்றனர். இதற்கிடையில், பாலசுப்பிரமணியன் கொலையுண்ட தகவல் தெரிந்து நாதக நிர்வாகிகள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x