Published : 16 Jul 2024 05:57 AM
Last Updated : 16 Jul 2024 05:57 AM
சென்னை: தமிழகத்தில் 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2022 ஆகஸ்டில் வெளியிட்டது. இதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
2023 ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பரில் முடிந்துவிட்டது. ஆனால், 10 மாதங்கள் ஆகியும் தேர்வு செய்யப்பட்ட 986 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை.
எனவே, அவர்களுக்கு விரைவாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் (தமிழக கிளை) நிர்வாகிகள் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் சில திட்டங்களில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய பணியாற்றும் மருந்தாளுநர்களும் தேர்வில் பங்கேற்றனர். கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தங்களை பணி நிரந்தரம் செய்த பிறகு 986 மருந்தாளுநர்களுக்கு பணிவழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால், தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ளவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உடனடியாக இதில் தலையிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT