

சென்னை: மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,280 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட தகவல்: பிப்.15-ம் தேதி மகா சிவராத்திரி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 125 பேருந்துகளும், நாளை 500 பேருந்துகளும், சனிக்கிழமை 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,901 பயணிகளும் சனிக்கிழமை 5,364 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,128 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.