

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்ட்டர் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் பொதுச் செயலாளர் தெளிவாக கூறியிருக்கிறார். இதில் சந்தேகம் இருக்கிறது. எதற்காக அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்?
அதாவது, கூலிப்படை ஒழிக்கப்பட வேண்டும். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அந்த நபர் சரண் அடைந்துள்ளார். அவரை ஆயுதங்கள் வைத்திருந்த இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சிறை விதிமுறைகளின்படி, ஒரு குற்றவாளியை 7 முதல் 7.30 மணிக்கு மேல்தான் போலீஸார் அழைத்து செல்ல முடியும். ஆனால், காலை 5.30 மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
அதேபோல், புழல் சிறைக்கும் போலீஸார் திருவேங்கடத்தை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வெஜிடேரியன் வில்லேஜ் என்று இடம் 7 கீ.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒருவரால் 5 கி.மீட்டருக்கு மேல் ஓட முடியாது. தப்பியோடியவர், துப்பாக்கி எடுத்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், பதிலுக்கு போலீஸாரும் சுட்டதாக கூறுகின்றனர். இப்படி திரைக்கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அருமையாக செய்துள்ளனர்.
திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தால், மற்ற குற்றவாளிகள் வாய் திறக்கமாட்டார்கள். வாய் திறந்தால், இதே நிலைதான் உங்களுக்கும், என்ற அச்சுறுத்தலை மற்றவர்களுக்கும் ஏற்படுத்ததான், இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக என்பதுதான் கேள்வி.
இந்த அரசுக்கு மடியில் கனமில்லை என்றால், சிபிஐ விசாரணை வைத்துவிட்டு செல்ல வேண்டியதுதானே? சிபிஐ விசாரணை வைக்காதது ஏன் என்பது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி. சிபிஐ விசாரணை நடத்தி, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிட்டுவிட்டு, சரண்டர் ஆன நபரை தப்பி ஓடியதாக கூறி அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.
என்ன சொல்கிறார் அண்ணாமலை? - இதனிடையே, சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர் ரவுடி திருவேங்கடம். அவர் ஏன் தப்பி ஓட வேண்டும்? அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீஸார் வெளியிட்டுள்ள குற்றவாளிகள் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை அவர்கள்தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை இவர்கள் ஏன் கொலை செய்தார்கள்? இவர்களை ஏவியது யார்? அரசியல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இதையெல்லாம் விசாரிக்கத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.