அம்மா உணவகங்களில் ‘பிரசாதமான சாதம்’ - அளவு குறைக்கப்பட்டதாக புகார்!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 கரண்டி சாதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கரண்டியாக குறைத்து வழங்குவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வாசகர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்தியேக ‘உங்கள் குரல்’ சேவை புகார் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது: அம்மா உணவகம் தொடங்கப்பட்டபோது, அனைத்து அம்மா உணவகங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டன. அனைத்திலும் மின் விசிறிகள் இயங்கும். தூய்மையான குடிநீர் கிடைக்கும். ஆனால் இப்போது பாழடைந்த கட்டிடமாக பராமரிப்பின்றி அசுத்தமாக கிடக்கிறது.

முன்பு ரூ.5 -க்கு 3 கரண்டி சாதம் கொடுப்பார்கள், வயிறு நிறையும். ஆனால் இப்போது 139-வது வார்டு, மேற்கு மாம்பலம், ராகவாரெட்டி காலனியில் உள்ள அம்மா உணவகம், 140-வது வார்டு, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில், மாந்தோப்பு மாநகராட்சி பள்ளி எதிரில் இயங்கும் அம்மா உணவகம் ஆகியவற்றில் ஒரு கரண்டி தான் கொடுக்கிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டால், ரிப்பன் மாளிகையில் போய் புகார் செய்யுமாறு கூறுகின்றனர். பணியாளர்கள் ஒருவரும் கனிவுடன் பேசுவதில்லை. அவர்களின் பேச்சும் மரியாதை குறைவாக உள்ளது.

அம்மா உணவகங்களில் பார்சல் கொடுக்க கூடாது. ஆனால் இட்லி போன்றவற்றை பார்சல் கொடுத்து, விரைவாகவே காலி செய்துவிடுகின்றனர். இதனால் பலருக்கு உணவு கிடைப்பதில்லை. எனவே, அம்மா உணவகத்தை தொடங்கியபோது, வழங்கிய அளவில் இப்போதும் சாதங்களை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “அம்மா உணவகங்கள் அனைத்தும் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளன. சில உணவகங்களில் உணவு குறைவாக வழங்கும் புகார் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in