

சென்னை: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும்முருக பக்தர்கள், முக்கிய பிரமுகர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், மாநாட்டு இலச்சினை வெளியிடுதல், ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுபேசும்போது, ‘‘முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், ஹாங்காங், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன.
இந்த ஆய்வுக் கட்டுரைகளை இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு பரிசீலிக்கும். அவற்றில் தகுதிவாய்ந்த கட்டுரைகளை தேர்வு செய்து ஆய்வு மலர்களில் இடம்பெறச் செய்திடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மாநாட்டின் அனைத்து அரங்குகளையும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக வடிவமைக்க வேண்டும். அதற்கான பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில், துறையின்செயலாளர் பி.சந்திரமோகன்,ஆணையர் க.வீ.முரளீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.