Published : 15 Jul 2024 05:50 AM
Last Updated : 15 Jul 2024 05:50 AM
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுகின்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் சென்னை தொமுச அலுவலகத்தில், எச்எம்எஸ் தேசியத் தலைவர் க.அ.ராஜாஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கும், இதற்கான பணிகளில் இடையறாது உழைத்த அனைத்து தொழிலாளர்கள், விவசாய சங்கதோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை எதிர்த்து போராடி வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும், 3 குற்றவியல்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நிதிநிலை அறிக்கையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை இடம் பெறச்செய்ய வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 24-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொழில் மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து தொழிற்சங்களின் சார்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது.
மு.சண்முகம் தொமுச, க.அ.ராஜாஸ்ரீதர் ஹெஎம்எஸ், ம.ராதாகிருஷ்ணன் ஏஐடியுசி, ஜி.சுகுமாறன் சிஐடியு, டி.வி.சேவியர் ஐஎன்டியுசி, வி.சிவகுமார் ஏஐடியுசி, எம்.திருநாவுக்கரசு ஏஐசிசிடியு, எஸ்.மாயாண்டி டியுசிசி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT