Published : 10 May 2018 07:05 AM
Last Updated : 10 May 2018 07:05 AM

மோடியுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்; தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உண்டு- பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கருத்து

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் நடிகர் ரஜினிகாந்துக்கு இருப்பதாக பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ரஜினியும் மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக தேர்தல் முடிந்ததும்தான் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்க முடியும். தேர்தல் நடக்கும்போதே அறிவித்தால் கர்நாடகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் இந்த தாமதம். காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறுவழியில்லை.

வேறொருவர் ஆட்சி அமைக்கும் நிலை உருவானால்தான் அதிமுக அரசு கவிழும். இவர்தான் அடுத்த முதல்வர் என ஒருவரை கொண்டு வந்து நிறுத்த எந்தக் கட்சியாலும் முடியவில்லை. முதல்வர் பழனிசாமி அரசு செயல்படுவதாகவே நான் நினைக்கவில்லை.

ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது எனது கருத்து. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யாருக்கும் நான் ஆலோசனை வழங்கவில்லை. ஆனால், பலருக்கும் நான் ஆலோசகராக இருப்பதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

தேசிய அளவில் 3-வது அணி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எடுத்து வரும் முயற்சிகள் பாஜகவுக்கே சாதகமாக அமையும். இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பினரோடு கலந்துரையாடிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘‘மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால், நீர் மேலாண்மை திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் அனைத்திலும் அரசியல் செய்கின்றனர். காவிரி பிரச்சினையில் உள்ள அரசியலை தமிழக மக்கள் புரிந்துகொண்டார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x