

கல்லீரல் செயலிழந்தவரை அறுவைச் சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தி ஸ்டான்லி மருத்துவமனை மருத்து வர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
திருவண்ணாமலையைச் சேர்ந்த சிசிலி, சத்தியமூர்த்தி தம்பதியின் மகன் மோகன பிரசன்னா. பொறியியல் கல்லூரி மாணவரான இவருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென கடும் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மோகன பிரசன்னாவுக்கு கல்லீரல் கோளாறு காரணமாக ரத்தம் உறையாமல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இவருக்கு ரத்தம் உறைய எடுத்துக்கொள்ளும் நேரம் (ப்ரோத்ராம்பின் நேரம்) 114 விநாடிகளாக இருந்தது. சாதாரணமாக, ரத்தம் உறையும் நேரம் 13 விநாடிகளுக்குள் இருக்க வேண்டும்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மோகன பிரசன்னாவை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினர். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தனர்.
எனவே மோகன பிரசன்னாவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இங்கு அவரை பரிசோதித்த மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் சுந்தரமூர்த்தி, ஈரல் மற்றும் குடல் நோய் மருத்துவ சிகிச்சை துறை தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பிரசன்னாவுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என தீர்மானித்தனர்.
இதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், ரத்தம் உறைவதற்கு தேவையான மூலக்கூறுகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, அவை இவரது உடலில் செலுத்தப்பட்டன. இச் சிகிச்சை மூலம் மோகன பிரசன்னா பூரணமாக குணமடைந்தார்.
பார்வை இழந்தவருக்கு நவீன சிகிச்சை
இதேபோல், கொருக்குப்பேட் டையை சேர்ந்தவர் மதிவாணனின் மகன் மணிமாறன். இவர் சென்னை கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதோடு, வலது கண்ணில் பார்வையும் பறிபோனது. உடனடியாக, அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, தலையில் கண் இருக்கும் பகுதியில் எலும்பு உடைந்து, பார்வை நரம்பின் மீது அழுத்திக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கண் மருத்துவரின் ஆலோசனைப்படி காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அத்துறை தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் தலைமையில், பேராசிரியர் டாக்டர் சீதாலஷ்மி, உதவி பேராசிரியர்கள் டாக்டர் சந்திரமௌலி, டாக்டர் சரவண செல்வன், டாக்டர் பரணிதரன் ஆகியோர் அடங்கிய குழு, மூக்கின் வழியாக உள்நோக்கிக் கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது பார்வை நரம்பின் மீது அழுத்திக் கொண்டிருந்த எலும்புத் துண்டு அகற்றப்பட்டது. இதன் மூலம், மணிமாறனுக்கு மீண்டும் கண் பார்வை பழைய நிலைக்குத் திரும்பியது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனையில் ரூ.2 லட்சம் செலவாகி யிருக்கும். ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் இச்சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.
இவ்வாறு டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.