

கல்விக்கடன் கொடுத்த ஒரு பொதுத்துறை வங்கி முன்பே கடனைக் கட்டச்சொல்லி என்னை மிகவும் மோசமாக நடத்தியது. அதுமட்டுமல்லாமல் நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு வைத்திருந்த ரூ 10 ஆயிரம் பணத்தை கணக்கில் இருந்து எடுக்கவிடாமல் ‘லாக்’ செய்தனர் என்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்தார்.
மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 101-ம் இடத்தில் வெற்றி பெற்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் தேர்வாகியுள்ளார். சிறுவயதில் இருந்தே வறுமையிலும், பணப்பிரச்சினைகளுக்கு மத்தியிலும் படித்து ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த சிவகுரு பிரபாகரன் தனது குடும்பத்தின் சூழல் கருதி 4 ஆண்டுகள் மர அறுவைத் தொழிற்சாலையில் பணியாற்றினார். அதன்பின் அதில் கிடைத்த பணத்தையும், வெளியில் கடன் பெற்றும் தனது பொறியியல் உயர்கல்வி படிப்பைத் தொடர்ந்தார். சென்னை ஐஐடியில் தனது எம்டெக் படிப்பில் சேர்ந்து படிக்கும் போதுதான் சிவகுரு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி அதில் வெற்றி பெற்றுள்ளார்.
மிகுந்த பணப்பிரச்சினைகளுக்கு மத்தியில், வங்கியிலும், நண்பர்களிடத்திலும் கடன் பெற்று சிவகுரு தனது படிப்பை முடித்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும் கூட அவ்வப்போது தனக்கு கிடைக்கும் பணத்தை நண்பர்களிடம் கொடுத்து கடனை அடைத்து வந்துள்ளார்.
ஆனால், தனது கல்விக்காக பேராவூரணியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் பெற்ற கடனுக்காக அந்த வங்கி நிர்வாகம் சிவகுருவை நடத்திய விதம் அவரை மிகவும் பாதித்துள்ளது.
இது குறித்து சிவகுரு பிரபாகரன் 'தி இந்து' (ஆங்கிலம் ) நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நான் கடந்த 2004-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, குடும்பத்தின் தேவைக்காக மர அறுவை மில்லில் வேலை செய்தேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து கடந்த 2008-ம் ஆண்டு சிவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இந்தப் படிப்புக்காக பேராவூரணியில் உள்ள ஒரு பிரபலமான அரசு வங்கியில் ரூ.76 ஆயிரம் கல்விக்கடன் பெற்றேன்.
ஆனால், நான் படிப்பை முடிப்பதற்குள் அந்த வங்கி நிர்வாகத்தினர் எனக்கு பலமுறை கடனைக் கட்டச் சொல்லி என்னை வேதனைப்படுத்தினார்கள். வேலை கிடைத்தவுடன் நான் உறுதியாக கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவேன் என்று பலமுறை வங்கி நிர்வாகத்திடம் நேரில் சென்று உறுதிமொழி அளித்தும் வங்கி அதிகாரிகள் என்னிடம் மிகவும் மோசமாகவும், கடுமையாகவும் நடந்து கொண்டனர்.
நான் சென்னை ஐஐடியில் எம்.டெக். படிப்பு படிக்கும் போது, வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசின் மனிதவளத் துறையிடம் இருந்து ரூ.8 ஆயிரம் உதவித்தொகை எனக்குக் கிடைத்த போதிலும், அது என் கல்விச்செலவுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால், எனது செலவுக்கு தேவையான பணத்தை நண்பர்களிடம் இருந்து பெற்றேன். ஒரு கட்டத்தில் நான் நண்பர்களிடம் இருந்து பெற்ற தொகை அதிகமானதால், ரூ.2.5 லட்சத்தை திருப்பிக் கொடுத்தேன்.
நண்பர்களிடத்தில் கடன்பெற்ற பணத்தை திருப்பிக்கொடுத்த நான் வங்கியில் கடன்பெற்ற பணத்தைக் கொடுக்கமாட்டேனா. வங்கி நிர்வாகத்தினர் எனக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, கடனை திருப்பிச் செலுத்தக் கூறினார்கள்.
ஆனால், நான் அவர்களிடம் உறுதி அளித்தேன். என் பெற்றோர் கல்வியறிவு இல்லாதவர்கள், எனக்காக கடன் பெற்று இருக்கிறார்கள் . ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் பணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்திவிடுவேன் என்று அதிகாரிகளிடம் உறுதியளித்து ஒரு சிறிய பிரிவுத் தொகையை திருப்பிச் செலுத்தினேன்.
கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, அரசுத்துறை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அதில் நான் சேரவில்லை. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று நான் நாட்டுக்காக சேவை செய்ய விரும்பினேன்.
நான் ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்காக என் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால், என் வங்கிக் கணக்கை திடீரென முடக்கிய வங்கி நிர்வாகம் என்னால் ரூ.10 ஆயிரத்தை எடுக்கவிடாமல் ‘லாக்’ செய்துவிட்டது. எனக்கு வேறு வழி தெரியாமல், நண்பர்களிடத்தில் பணம் பெற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன்.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக பலமுறை வங்கி அதிகாரிகளைச் சந்திக்க வங்கிக்குச் சென்று இருக்கிறேன் ஆனால், வங்கியின் பாதுகாவலர்கூட வங்கி மேலாளரை சந்திக்க அனுமதிக்கவில்லை. இவை அனைத்தும் இப்போது நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.''
இவ்வாறு சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
தன்னைப் போல் மற்ற மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று நாட்டுக்காக சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ள சிவகுரு, ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அந்தக் குறிப்பிட்ட அரசு வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டோம்.
அவர்கள் தரப்பில் கூறுகையில், ''உயர்கல்வி பயிலப்போகும் முன், அந்த மாணவர் முறைப்படி கடிதம் எழுதி உரிய வங்கி மேலாளரிடம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் இப்படி ஏற்பட்டு இருக்காது. ஒருவேளை கடிதம் கொடுத்தாலும் அது ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவ்வாறு அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்துவிட்டால், வங்கிக்கடன் செலுத்தும் காலம் படிப்பு முடித்தவுடன் தொடங்காது. ஆனால், பணம் செலுத்தாவிட்டால், 3 மாதங்களுக்கு பின் வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிடும்'' எனத் தெரிவித்தனர்.