Published : 13 Jul 2024 08:04 PM
Last Updated : 13 Jul 2024 08:04 PM
புதுச்சேரி: தேர்தல் தோல்வி, முதல்வர் மற்றும் பாஜக அமைச்சர்கள் மீது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் புகார் என பரபரப்பான அரசியல் சூழலில் நாளை (ஜூலை 14) புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூடுகிறது.
புதுவை மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இவர்கள் முதல்வர் ரங்கசாமி மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளதுடன், பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும்.
என்ஆர்.காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன் புதுவை அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் புரையோடிப் போயுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டி வருகிறார். அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 7 பேரும் ஒட்டுமொத்தமாக டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர் மேக்வால் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டனர்.
இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமரசம் செய்ய தேசிய தலைமை மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானாவை புதுவைக்கு அனுப்பியது. ஆனாலும் சமரசம் ஏற்படவில்லை. மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புகார் தெரிவிக்க அதிருப்தி எம்எல்ஏ-க்கள் நேரம் கேட்டு காத்துள்ளனர். இதுமட்டுமல்லாது மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக மாநிலத் தலைவர் செல்வகணபதியை பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னாள் தலைவர் சாமிநாதன் நேரடியாகவே மாநிலத் தலைவரை மாற்ற கோரியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் புதுவை மாநில பாஜக செயற்குழு நாளை காலை 10 மணிக்கு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் கூடுகிறது. மாநில தலைவர் செல்வகணபதி எம்பி தலைமையில்ல் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், பாஜக எம்எல்ஏ-க்கள், மற்றும் நியமன எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுவை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் பங்கேற்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏ-க்களை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அவர்களின் கருத்துகளை கேட்டப்பிறகு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முதல்வர் ரங்கசாமியையும் சந்திப்பார் என்றும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT