

சென்னை: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) 2 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டின் மின்பகிர்மான செயல்பாடுகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளதாலும், நாட்டின் பிற மாநிலங்களில் மின்சார பகிர்மான நிறுவனங்கள் தனித்து இருப்பதையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனப்படும் டான்ஜெட்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மரபு சார்ந்த படிம எரிபொருள் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎன்பிஜிசிஎல்) என்ற தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இதர பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு எரிசக்தி முகமையை (டெடா) இணைத்து, புதிதாக தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎன்ஜிஇசிஎல்) என்ற தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகமும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், புவிவெப்பம், உயிரி, கடல் அலைகள், நீர் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்.
இந்நிலையில், பிரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. இதையடுத்து, மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும், டான்ஜெட்கோ நிறுவனம், தமிழ்நாடு மின்பகிர் மானக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மின்விநியோகத்தை மட்டும் கவனிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
டான்ஜெட்கோ பிரிக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கான சொத்துகள், பொறுப்புகள், ஒப்பந்தங்கள், பத்திரங்கள், அலுவலக தளவாடங்கள், அலுவலகப் பணியாளர்கள் என அனைத்தும் பிரிக்கப்பட்டுள்ள 2 நிறுவனங்களுக்கும் சமமாக பங்கிடப்படுகிறது.
இதற்கிடையே, நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் மின்விநியோகத்திலும், மின்உற்பத்தியிலும் எவ்வித இடர்பாடும் இருக்கக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.