

ஈரோடு: சீமானுக்கு நெருக்கடி கொடுக்கும்நோக்கம் அரசுக்கும், முதல்வருக்கும் இல்லை என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின், சுயநிதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, சிதிலமடைந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டிடங்களுக்கு அனுமதிபெறுவதில் உள்ள பிரச்சினைகளைக் களையும் வகையில், 2,500முதல் 3,000 சதுரஅடி வரையில்கட்டிடம் கட்ட, சுயச் சான்றிதழ்போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும். தொடர்ந்து, ஈரோடு மாநகரப் பகுதியில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனின் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்த, எந்த விதமான நடவடிக்கையும் அரசுமேற்கொள்ளவில்லை. துரைமுருகன் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்று செயல்படுகிறது. யாருடைய பேச்சு உரிமையைத் தடுப்பதற்கான நடவடிக்கையையும் இதுவரை அரசுமேற்கொள்ளவில்லை.
பேச்சுரிமையை தடை செய்யக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கம், அரசுக்கும், முதல்வருக்கும் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.