Published : 13 Jul 2024 06:15 AM
Last Updated : 13 Jul 2024 06:15 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் யூக்கலிப்டஸ் காட்டில் பதுங்கி இருந்த ரவுடி துரைசாமியை நேற்று முன்தினம் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
காட்டில் நடந்தது என்ன என்பதுகுறித்து ஆலங்குடி காவல் துறையினர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப் பகுதியில் இருவர்துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்குச் சென்று, கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.
வம்பன் பண்ணைக்கும், தனியார் வேளாண் கல்லூரிக்கும் இடையில் பிரதான சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் பேச்சுக்குரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பேரில் ஒருவர் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை(எ) துரைசாமி என்பது தெரியவந்தது. துரைசாமி நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் பெட்ரோல் குண்டும் வைத்திருந்தனர்.
அவர்களைப் பிடிக்க முயற்சித்தபோது, ஆய்வாளர் முத்தையனை நோக்கி துரைசாமி துப்பாக்கியால் சுட்டார். அவர் சுதாரித்துக்கொண்டு விலகியதால், தோட்டா அவர் மீதுபாயாமல் சென்றது. துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு, சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தபோதும், மீண்டும் துரைசாமி சுட முயன்றார்.
மேலும், அவரைப் பிடிக்க உதவி ஆய்வாளர் மகாலிங்கம் முயன்றபோது, அவரை பட்டாக் கத்தியால் துரைசாமி வெட்டியதில், மகாலிங்கத்துக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வானத்தை நோக்கி... மீண்டும் ஆய்வாளரை வெட்டமுயன்றபோது, துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஆய்வாளர் சுட்டுள்ளார். அப்போது, துரைசாமியுடன் இருந்த மற்றொருவர், பெட்ரோல் குண்டை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆனால், மீண்டும் ஆய்வாளரை வெட்டுவதற்கு துரைசாமி முயன்றபோது, அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் துரைசாமியின் இடது முழங்காலில் ஆய்வாளர் சுட்டுள்ளார்.
அப்போதும் துரைசாமி சரணடையாமல் ஆய்வாளரைக் கொலை செய்ய முயற்சி செய்ததால், வேறு வழியின்றி துரைசாமியை மீண்டும் ஒருமுறை சுட்டதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.
துரைசாமியை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT