Published : 17 May 2018 09:04 AM
Last Updated : 17 May 2018 09:04 AM

சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட நவீன வசதி கொண்ட புதிய பேருந்துகள்: முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி, தானியங்கி கதவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட மாதிரி பேருந்துகளை முதல்வர் கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வாங்காததால், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இதையடுத்து, 5 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்கி அரசு போக்குவரத்துக் கழகங்களில் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய வசதிகள் என்ன?

இந்நிலையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாதிரி பேருந்துகளைச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பேருந்துகளில் இருக்கும் பயணிகளுக்கான வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, போக்குவரத்துத் துறை செயலாளர் டேவிதார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த புதிய பேருந்துகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாடு, தீயணைப்பு கருவிகள், அவசர கால கதவு, தானியங்கி கதவு, ஓட்டுநர், நடத்துநர் நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வசதி, மது அருந்தியவரை கண்டறிய பிரீத் அனலைசர் கருவி உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.

5 ஆயிரம் பேருந்துகள்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த 2 ஆயிரம் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 2 மாதிரி பேருந்துகளை இங்கு கொண்டு வந்து முதல்வரிடம் காட்டினோம். அரசு போக்குவரத்துக் கழகங்களில் இன்னும் ஒன்றரை மாதத்தில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இணைக்கப்படும்.

இந்த நிதி ஆண்டில் மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, மொத்தம் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப் படும். புதிய பேருந்துகளில் பயணிகள் வசதியாக அமரும் வகையில் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. பேருந்து செல்லும்போது அடுத்த நிறுத்தம் குறித்து மைக்கில் அறிவிக்கப் படும்.

வைபை வசதி கொண்ட பேருந்து இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு வசதியாக படுக்கை வசதி, கழிவறை, ஏசி வசதி கொண்ட நவீன பேருந்துகளும் இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x