Last Updated : 06 May, 2018 07:45 AM

 

Published : 06 May 2018 07:45 AM
Last Updated : 06 May 2018 07:45 AM

பாரத ஸ்டேட் வங்கியில் வரைவோலை எடுக்க ஆதார் எண் கட்டாயம்: புதிய விதிமுறையால் வாடிக்கையாளர்கள் அவதி

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் அங்கு வரைவோலை (டி.டி.) எடுக்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்கவும், பண மோசடிகளைத் தடுக்கவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆதார் எண் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் வரைவோலை எடுப்பதற்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி சிலரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கூறியதா வது:

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சென்னை மேத்தா நகரைச் சேர்ந்த ரவிக்குமார்: என் மகளின் கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்காக வரைவோலை எடுக்க நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு நேற்று சென்றேன். அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, கவுன்ட்டரில் பணம் செலுத்தச் சென்றேன். ‘‘உங்களுக்கு ஸ்டேட் வங்கியில் கணக்கு இருக்கிறதா?’’ என்று வங்கி ஊழியர் கேட்டார். “இல்லை” என்றேன்.

‘‘எங்கள் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் வரைவோலை எடுக்க வேண்டுமானால் ஆதார் எண் கட்டாயம். இந்தப் புதிய விதிமுறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது’’ என்றார்.

கட்டணத் தொகை ரூ.90 மற்றும் கமிஷன் தொகை ரூ.25 சேர்த்து மொத்தமே ரூ.115தான் என்றேன். தொகை எவ்வளவு என்றாலும், ஆதார் கட்டாயம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

வேறு வழியின்றி, வீட்டுக்குச் சென்று ஆதார் அட்டையை எடுத்துவந்து, எண்ணைக் கொடுத்துவிட்டு, வரைவோலை எடுத்தேன். இதுதொடர்பாக முறையாக முன்அறிவிப்புகூட செய்யவில்லை.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம்: வங்கிக் கணக்கு தொடங்கவோ, இதர வங்கிச் சேவைகளைப் பெறவோ ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இன்னமும் இறுதித் தீர்ப்பு வராத நிலையில், ஆதார் எண் கட்டாயம் என்று வங்கிகள் கெடுபிடி செய்வது வாடிக்கையாளர் விரோதச் செயல். சட்டத்துக்குப் புறம்பானது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ: ஆதார் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை எதற்கும் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆதார் எண் கட்டாயம் என்று சொல்வது தவறான நடவடிக்கை. இப்போக்கை வங்கிகள் தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்கள் எதிர்பார்ப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளிவர உள்ளன. இதையடுத்து, கல்லூரி விண்ணப்பங்களுக்கு டி.டி. எடுக்க மாணவர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு வருவார்கள். இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் வரைவோலை எடுக்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கியிருப்பது மாணவர்கள், பெற்றோருக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும். எனவே, இந்த விதிமுறையை வங்கி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x