

கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) 22-வது ‘அக்ரிஇன்டெக்ஸ் 2024’ வேளாண் கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
டெல்லியில் உள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும்விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், புனேவில் உள்ள அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியை இந்தியவேளாண் ஆராய்ச்சிக் கழகஇயக்குநர் ஜெனரல் ஹிமான்ஷுபதக் நேற்று தொடங்கிவைத்து, விழா மலரை வெளியிட்டார். வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள 7 அரங்குகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 490 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த தொழில் துறையினர், தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் தானியங்கிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை, பசுமைக் குடில்கள், மாடித்தோட்டம், தூவல் பாசனம், நுண்ணூட்டம் மற்றும் பயிர் மேலாண்மை, சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், நாற்றுப் பண்ணை,நிலச் சீரமைப்பு, உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள், ட்ரோன்கள் பயன்பாடு, மீன் வளர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான அரங்குகள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
வரும் 15-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், அக்ரி இன்டெக்ஸ் தலைவர் தினேஷ்குமார் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.