Published : 12 Jul 2024 05:35 AM
Last Updated : 12 Jul 2024 05:35 AM
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் மனோகரன் அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியபோது, உதவிப்பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாகக்கூறி, அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெமோவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தேவதாஸ் மனோகரனுக்குரிய ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்க வேண்டுமென கடந்த2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தேவதாஸ் மனோகரன் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகும்படி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே. குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவாளர் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகும்படி அவருக்கு பிறப்பித்த நோட்டீஸைபெற்றுக்கொண்ட பிறகும் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT