நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலர், ஆணையர்  நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலர், ஆணையர்  நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய் துறை செயலர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலமாக அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிபுரியும் துணை வட்டாட்சியர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த துணை வட்டாட்சியர்களான எஸ். சீனிவாசன், வேலு, உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறையில் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட துணை வட்டாட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரனும், வழக்கறிஞர் எம்.லோகநாதனும் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த அவமதிப்பு வழக்கில் வரும் ஜூலை 27ம் தேதியன்று தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் வி.ராஜாராமன், ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சராயு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in