ரூ.4 கோடி சர்ச்சை: தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்.6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்கு சென்றும், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த ஜூன் 31-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே இன்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முன்னதாக, எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி அதிகாரிகள் நீதிமன்ற அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in