‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1,000 பெற அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1,000 பெற அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளும் மாதம் ரூ.1,000 பெற கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண் கல்வியை போற்றும் விதமாகவும், மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்த ‘புதுமைப்பெண்’திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000, சமூகநலத் துறையால் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன்மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு வரை அரசு பள்ளி மாணவிகள் மட்டுமே இதில் பயன்பெற்றனர். இந்நிலையில், 2024-25-ம் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும்.

எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவிகள், ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் பயன்பெற, அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பித்துபயனடையலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in