Published : 11 Jul 2024 05:24 AM
Last Updated : 11 Jul 2024 05:24 AM

கிண்டி கலைஞர் மருத்துவமனையில் இதய பெரிய ரத்தக்குழாயில் 100% அடைப்பு ஏற்பட்டவருக்கு சிகிச்சை: உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

இதயத்தின் பெரிய ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞருக்கு, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. பூரண குணமடைந்த அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

சென்னை: இதயத்தின் பெரிய ரத்தக்குழாயில்100 சதவீத அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞருக்கு சென்னை கிண்டிகலைஞர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் எம்.ஸ்டாலின் மணி (58). மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டதால், இசிஜி, எக்கோ பரிசோதனை செய்துள்ளார். அதனை குடும்ப மருத்துவரிடம் காண்பித்தபோது, மாரடைப்பு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், இதயத்தின் பெரிய ரத்தக்குழாயான இடது புறம் இருக்கும் ரத்தக்குழாயில் (Left Anterior Descending - LAD) 100 சதவீத அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்டாலின் மணி சேர்க்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாய் அடைப்புக்கு‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நண்பரின் உதவியுடன் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 20 நாட்களுக்கு மாத்திரைகளை கொடுத்தனர். 20 நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதியாகுமாறும் அறிவுறுத்தினர்.

அதன்படி, 20 நாள் கழித்து ஸ்டாலின் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி ஆலோசனையின்படி இதயவியல் சிறப்புசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.தர்மராஜ் தலைமையிலான குழுவினர் வலது தொடை பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ‘ஸ்டென்ட்’ கொண்டு சென்று இதய ரத்தக்குழாயில் பொருத்தி அடைப்பை சரிசெய்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் பூரணமாக குணமடைந்த ஸ்டாலின் மணி, தனது மனைவியும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, இதயவியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.தர்மராஜ் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து சிறப்பாக சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

இதயவியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.தர்மராஜ் கூறும்போது, “இதயத்தில் பெரிய ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு என்பது அரிதாக வரக்கூடியது. அத்தகைய அடைப்பு ஏற்பட்ட ஸ்டாலின் மணிக்கு ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும், வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x