

சென்னை: டேங்கர் லாரி வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருளை விநியோகம் செய்யும் சென்னையைச் சேர்ந்த சில டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று (ஜூலை 10) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இதனால், பெட்ரோல், டீசல்விநியோகத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல், டீசல் போதிய அளவு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகள் வழக்கம்போல இயக்கப்படும். இதன்மூலம், எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.