Published : 27 May 2018 09:26 AM
Last Updated : 27 May 2018 09:26 AM

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை தாக்கல் செய்தார் டாக்டர் சிவக்குமார்: கைப்பட எழுதிய உணவு பட்டியலும் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பேசிய ஆடியோவை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்தார். அந்த ஆடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஆளுநர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் சீனிவாசன், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவகுமார் ஆகிய 6 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறலை எப்படி உணர்ந்தார் என்பது தொடர்பாக பேசிய ஆடியோவை டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்தார். அதோடு, 2016 ஆகஸ்ட் 2-ம் தேதி ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியலையும் அவர் சமர்ப்பித்தார்.

பின்னர் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 16-6-2016 முதல் 2-8-2016 வரை தனக்கு என்ன உடல் நலக்கோறுகள் ஏற்பட்டது என்பதை ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய அசல் புத்தகத்தை டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் என்ன உணவு சாப்பிட்டார். ரத்த அழுத்தம்போன்ற விவரங்கள் உள்ளன.

அதோடு, அப்போலோ மருத்துவமனை யில் மருத்துவர் அர்ச்சனா உடன் இருக்கும்போது பதிவு செய்த 2 ஆடியோ பதிவுகளையும் டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ‘கருப்பு பூனை படை அப்போலா மருத்துவனையில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படவில்லை. அதில் எந்த விதிமீறலும் இல்லை. ஏனெனில் அந்த பாதுகாப்பு ஜெயலலிதாவின் போக்குவரத்து வழித்தட பாதுகாப்புக்கு மட்டுமே இருக்கும். ஜெயலலிதாவுக்கு தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை வேறு யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

(மேலும் செய்தி படங்கள் உள்ளே..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x