Published : 09 Jul 2024 01:43 PM
Last Updated : 09 Jul 2024 01:43 PM

“திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை” - எல்.முருகன்

சென்னை: “தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விபி துரைசாமி, கார்த்தியாயினி போன்றோர் இன்று (செவ்வாய்க் கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் வன்முறைகள் தொடர்பாக இன்று தேசிய எஸ்சி ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்று புகார் கொடுக்க உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாகியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் இரு தினங்கள் முன்பு பட்டியலின தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். இதுதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலைமை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தனர். இதில் 40 பேர் பட்டியலின மக்கள். ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜூன் கார்கேவோ யாரும் அந்த மக்களை சந்திக்கவில்லை. ஹாத்ராஸுக்கும் மற்ற இடங்களுக்கும் செல்லும் ராகுல் காந்தி, கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தவை குறித்து ராகுல் காந்திக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் செல்லவில்லையா.

தமிழகத்தில்பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த சில கொடுமைகளை உங்கள் முன் தெரிவிக்கிறேன். மார்ச் 2022 அன்று, 22 வயதான பட்டியலின பெண் ஒருவர் 8 பேர் அடங்கியவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் இருவர் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள். மே 2022ல் பாஜகவின் பட்டியலின பிரிவு நிர்வாகியான பாலசந்தர் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் 22 ஊராட்சிகளில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் அமர இருக்கைகள் தரப்படவில்லை. இது தமிழகத்தில் சாதிய பாகுபாடு நிகழ்வதற்கு சான்று. இத்தனைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களால் அவர்கள் கடமையை செய்ய முடியவில்லை. இதற்கு உதாரணம் தான் சேலம் அருகே சுதா என்ற பஞ்சாயத்து தலைவர் குடியரசு விழாவில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுக்கப்பட்டது.

திமுக அமைச்சரான பொன்முடி பொது நிகழ்வு ஒன்றில் பெண் ஒருவரிடம் 'எந்த சாதி' என்று கேட்டார். திமுகவில் சீனியர் அமைச்சர் பொன்முடி. அவர் பொது நிகழ்வில் பட்டியலின பெண்ணிடம் எந்த சாதி என்று கேட்கிறார். தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது. இந்த மாதிரியான சாதிய பாகுபாடுகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை நேற்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் இரண்டு வாரத்துக்குள் இதற்கு சரியான காரணத்தை கூற வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

அதேபோல் சேலம் மாவட்டத்தில் கோயில் திருவிழாவின் போது திமுக நிர்வாகி ஒருவர் பட்டியலின இளைஞர் ஒருவரை திட்டி, அவரை கோயிலுக்குள் நுழைய கூடாது என்று பேசினார். அந்த திமுக நிர்வாகி மீது ஸ்டாலின் முதலில் நடவடிக்கை எடுத்தார். சில மாதங்களில் அந்த நிர்வாகி மீது நடவடிக்கை நீக்கப்பட்டு அவர் மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டார்.

2023 ஏப்ரலில் சென்னை நகரத்தில் பாஜகவின் மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் நாங்குநேரியில் பட்டியலின மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அதே திருநெல்வேலியில் பாஜகவின் இளைஞரணியை சேர்ந்த ஜெகன் பாண்டியன் திமுக நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டார்.

திண்டிவனத்தில் நகராட்சி துணை தலைவரான பெண் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர இருக்கை கொடுக்கவில்லை. அவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருக்கை கொடுக்கவில்லை. 2023 நவம்பரில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டதோடு, அவர் மீது சிறுநீர் கழித்த மோசமான சம்பவமும் நிகழ்ந்தது. 2024 ஜனவரியில் திமுக எம்எல்ஏ குடும்பம் தனது வேலைக்கார பெண்ணை துன்புறுத்தி, மோசமான நடத்திய சம்பவம் வெளிவந்தது. திருப்பூரில் நடந்த பள்ளி விழாவில் பட்டியலின மாணவர் அடித்து துன்புறுத்தப்பட்டார். திருநெல்வேலியில் தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்டார்.

ஒவ்வொரு வருடம் 2000க்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்கின்றன. அவற்றில் சிலவற்றை தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். பட்டியலின தலைவர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் திமுக ஆட்சியில் எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்கள் தினம் தினம் தீண்டாமையை எதிர்கொள்கின்றனர். சமூக நீதி காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, அதனை முறையாக பின்பற்றவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு இனி சமூக நீதியைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

ஆம்ஸ்ட்ராங் நகரின் மையப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்படியெனில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. சட்டம் ஒழுங்கில் திமுக அரசு படுதோல்வி கண்டுள்ளது. திமுக அரசில் நிகழ்ந்துள்ள பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக இன்று தேசிய எஸ்சி ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்று ஆதாரங்களுடன் புகார் கொடுக்க உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x