Published : 09 Jul 2024 05:14 AM
Last Updated : 09 Jul 2024 05:14 AM

மாநகராட்சி சார்பில் ஆறுகள், கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணி: அதிகாரிகள் தகவல்

சென்னை: மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ட்ரோன்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒழிக்கவே முடியாத பிரச்சினையாக கொசுத் தொல்லை இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இயற்கையாகவே கொசுத் தொல்லையும் கட்டுக்குள் இருந்தது.

இந்நிலையில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 1முதல் ஜூலை 8-ம் தேதி வரைவழக்கமாக 83 மிமீ மழை மாநகருக்கு கிடைக்கும். ஆனால் இந்த முறை 278 மிமீ மழைகிடைத்துள்ளது.

இது வழக்கத்தை விட 232 சதவீதம் அதிகம். இதன் காரணமாக சென்னையில் உள்ள கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மீண்டும் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ட்ரோன்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக தொடர்ந்து மழை பெய்தால் கொசுக்கள் பெருகும். பருவமழைக்கு முன்பாகவே, மாநகரம் முழுவதும் வீடு வீடாகவும், காலி இடங்களிலும் சோதனை நடத்திகொசு உற்பத்தி ஆதாரங்களான தேங்காய் கழிவுகள், பயன்படுத்தாத டயர்கள் உள்ளிட்டவற்றை அகற்றி இருக்கிறோம். குடியிருப்புப் பகுதிகளிலும் தேவையான இடங்களில் கொசு புகை மருந்து பரப்பப்பட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் 30-க்கும்மேற்பட்ட கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிலும், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றிலும் கொசுப்புழு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளைத்தொடங்கி இருக்கிறோம். மொத்தம் 6 ட்ரோன்களைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x